ஆளுநரை அவமதித்த கோயில் முதலாளி!
அண்ணாமலையாரைத் தரிசிப்பதற்காக 14-03-18 இரவே திருவண்ணாமலைக்கு வந்து விட்டார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். பயணியர் விடுதியில் தங்கினார். மறுநாள் காலையில் தூய்மை பாரதம் நிகழ்ச்சி. அண்ணாமலையார் கோயில் எதிரில் தெருச் சுத்தம் செய்தார். மீண்டும் விடுதிக்குச் சென்று, அரசு அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். 2 மணிக்கு மக்களிடம் மனுக்கள் வாங்கினார். 4 மணிக்கு அண்ணாமலையாரை தரிசித்தார்.
தரிசித்து விட்டு பத்ரகாளி கோயில் நிர்வாகி அருள்மணி என்பவர் ஏற்பாடு செய்திருந்த தென்மாநில சன்மார்க்க சங்க உலக சமாதான மாநாட்டுக்கு ஆளுநர் வந்தார்.
கூட்டம் தொடங்கியது. அருள்மணி பேசத் தொடங்கினார். ""என் கோயிலுக்கு வர இருந்த கவர்னரை வரவிடாமல் தடுத்து விட்டார்கள் அதிகாரிகள். என் பத்ரகாளி சக்தி வாய்ந்த சாமி என்பதை அதிகாரிகள் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முன் நான்கு கவர்னர்கள் என் விழாவுக்கு வந்திருக்கிறார்கள். இந்த பன்வாரிலால் ஐந்தாவதாக வரும் கவர்னர். கவர்னர் என்றால் அதிகாரிகளாகிய உங்களுக்குப் பெரிய ஆள். என்னைப் பொறுத்தவரை கவர்னர், பிரதமர், ஜனாதிபதி எல்லாரும் சாதாரண ஆட்கள். ஏன்னா நான் ஒரு சித்தர்....'' அருள்மணி இப்படிப் பேசிக் கொண்டே போனார். ""பேச்சை நிறுத்துங்க!'' என்று அதிகாரிகள் எச்சரித்தனர். அவர் நிறுத்தவில்லை. ஆளுநரும் முகம் சிவந்து எரிச்சலோடு அமர்ந்திருந்தார்.
பிறகு சால்வையை பெற்றுக் கொண்ட ஆளுநர், பேசுவதைத் தவிர்த்து விட்டுக் கிளம்பினார். பதறிய அருள்மணி ""சார்... சார்... கவர்னர் ஜீ... யூ ஸ்பீக்... ஒன் மினிட் ப்ளீஸ்!'' காலில் விழாத குறையாக கெஞ்சினார். அதன்பிறகு, ஒரு நிமிடம் பேசி விட்டுக் கிளம்பினார் ஆளுநர்.
ஆளுநர் கோபப்படும் அளவுக்கு அருள்மணி ஏன் பேசினார்?
""கிரிவலப் பாதையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து அருள்மணி கோயில் கட்டியிருக்கிறார். அந்தக் குறிப்பை கவர்னருக்கு நாங்கள் அனுப்பியிருந்தோம். ஆனால் அந்தக் கோயிலுக்கு ஆளுநர் போகவில்லை. அந்த எரிச்சலைக் காட்டி மேலும் எரிச்சலை வாங்கி கட்டிக் கொண்டார் அருள்மணி'' என்றார் காவல்துறை அதிகாரி ஒருவர்.
-து.ராஜா
நிர்வாண சித்ரவதை!
காவல்துறை அதிகாரிகளை எதிர்த்து, திரைப்படங்களில் கதாநாயகர்கள் பேசுவது போல எதார்த்தத்தில் எல்லாரும் பேச முடியும் என்று நினைத்து "வீரவசனம்' பேசிய ஒரு வி.ஐ.பி. இப்போது மாட்டிக்கொண்டு விழிக்கிறார்.
அரசு அதிகாரிகள் பட்டாசு ஆலைகளில் லஞ்சம் வாங்குவது குறித்து, வெளிப்படையான பேட்டிகளைக் கொடுத்து, மீடியாக்களின் செல்லப்பிள்ளை ஆனவர், சிவகாசி-மீனம்பட்டி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி.
மீடியா நண்பர்களுடனான நெருக்கத்தால், வட்டாட்சியர் அலுவலகம் தொடங்கி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை, நடக்கும் முறைகேடுகள் பற்றி அதிகாரிகளிடம் கேள்வி கேட்டு, அதுபற்றி மீடியாக்களில் சொல்லி, பிரபலமானார் விநாயகமூர்த்தி.
இதே பாணியில்தான், சிவகாசி நகர் போ.வ.காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராமநாதனைப் பற்றி விருதுநகர் மாவட்ட எஸ்.பி.க்கு ஒரு புகாரை அனுப்பினார் விநாயகமூர்த்தி. அதோடு நின்று விடாமல், ""எஸ்.ஐ. ராமநாதனின் கீழ்த்தரச் செயலைப் பாருங்கள்'' என்று வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோவையும் வெளியிட்ட விநாயகமூர்த்தி ""இனியும் நம்மால் சும்மா இருக்க முடியாது. ராமநாதனை இடமாற்றம் செய்ய வேண்டும். இல்லையேல் சிவகாசி காவல் நிலையத்தை முற்றுகையிடுவோம்'' என்றதோடு, ""ராமநாதா சரியான ஆம்பிளையாக இருந்தால் தைரியம் இருந்தால், காக்கிச் சட்டையைக் கழற்றி வைத்துவிட்டு வா. இதை நான் சொல்லவில்லை... மக்கள் சொல்கிறார்கள்'' என்று சவால் விட்டிருந்தார்.
விளைவு...? எஸ்.ஐ. ராமநாதனுக்கு வாட்ஸ்அப் மூலம் மிரட்டல்விட்டதாக கைது செய்யப்பட்டு, காவல்நிலையத்தில் நிர்வாண சித்ரவதைக்குள்ளாகி, சிறைக்குள் தள்ளப்பட்டுள்ளார் விநாயகமூர்த்தி.
-சி.என்.இராமகிருஷ்ணன்
விக்கிரகத்தை தேடி வந்த நித்தி?
திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் கோயிலுக்கு பிடதி நித்தியானந்தா தன் படை பரிவாரத்தோடு வந்தார். கடலில் இறங்கிக் கால் நனைத்து அலைநீரையள்ளித் தலையில் தெளித்துக் கொண்டார். கோயில் யானையிடம் ஆசி பெற்றார். வசந்த மண்டபத்தில் அவரது ஆட்களால் மாலை மரியாதை பெற்றார். பிறகு திருச்செந்தூர் மூலவரையும் சண்முகநாதரையும் தரிசித்தார். பிறகு இரண்டாம் பிரகாரம் வந்து சம்ஹாரமூர்த்தி சந்நிதியில் தனக்கான சத்ரு சம்ஹார யாகத்தை நடத்திவிட்டு ஒண்ணரை மணி நேரத்தில் கோயிலை விட்டுக் கிளம்பினார்.
""பெங்களூருவிலுள்ள பிடதி ஆசிரமத்தின் மீது பல வழக்குகள்... போதாக்குறைக்கு மதுரை உள்ளிட்ட பல மடங்களுக்குள் நுழைவதற்கே தடை. இப்படி ஏகப்பட்ட நெருக்கடிகள். அதனால்தான் தன் எதிரிகளை அழிக்கக்கூடிய "சத்ரு சம்ஹார' யாகத்தை இங்கே நடத்தினார்'' என்றார்கள் நித்தியின் சீட கோடிகள்.
திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சனை செய்பவர்கள் சிவாச்சாரியார்கள்தான் என்றாலும், மூலவரைத் தொட்டு பூஜிக்கிற உரிமை போத்தி எனப்படும் நம்பூதிரிகள் வசம்தான் உள்ளது.
பிடதி நித்தி பற்றி நன்கு அறிந்த ஒரு "போத்தி' நம்மிடம், ""சத்ரு சம்ஹார யாகம் செய்து முடிக்க ஆறு மணி நேரமாகும். ஆனால் ஒண்ணரை மணி நேரத்தில் முடித்துக் கொண்டு கிளம்பி விட்டார் என்றால் என்ன அர்த்தம்? அவர் வந்த நோக்கம்? நம்ம கோயில் மூலவருக்கு பின்னால் கருவறைக்குள் இரண்டு மூன்று வருடம் முன்பு ஒரு பழமையான விக்கிரகத்தைக் கண்டுபிடித்தார்கள். அது எப்படி வந்தது என்றோ, என்ன சிலையென்றோ தெரியவில்லை. அதுபற்றி அறநிலையத்துறை குறிப்பிலும் இல்லை. இப்போது அது கருவறையில் இல்லை. அந்தச் சிலையைத் தேடித்தான் நித்தியானந்தா வந்தார் என்று ஒரு பேச்சு இங்கே அடிபடுது'' என்று சந்தேகத்தைக் கிளப்பினார்.
நெருப்பின்றி புகை கிளம்பாதே.
-நாகேந்திரன்